வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “போலீஸ் அக்கா” (Police Akka Scheme) என்ற திட்டம் நேற்று (பிப்.18) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில், காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“போலீஸ் அக்கா” திட்டம்:
இந்த திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் உள்ள 308 பள்ளி மற்றும் கல்லூரிகளில் 113 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களிடம், மாணவிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் அல்லது அது சார்ந்த வேறு பிரச்னைகளையோ கூறலாம்.

இந்த பெண் காவலர்களுக்கென தனி அலைபேசி எண் உள்ள நிலையில், மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தங்களது பிரச்னையைத் தெரிவிக்க முடியும். மேலும், இந்த திட்டத்தில் பெண் காவலரிடம் புகார் அளிக்கும் மாணவியின் அடையாளம் மற்றும் பிற தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
பெண் காவலர்களிடம் புகார் அளியுங்கள்:
இந்த திட்டம் குறித்து மேடையில் பேசிய ஆட்சியர் சுப்புலட்சுமி, “இதன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பெண் காவலர் தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய விவரம் குறித்து பள்ளி, கல்லூரிகளின் அறிவிப்புப் பலகை, சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் எழுதி வைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள். வாரம் இரண்டு முறையாவது காவலர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுவதுடன், போதைப்பொருட்கள் நடமாட்டத்தையும் ஒழித்து, மாணவர்கள் அதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய முடியும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மிக அவசியம்:
பள்ளி, கல்லூரிகளில் காலையில் மாணவர்கள் கூடுகைக் கூட்டத்தில் இருக்கும்போது நியமிக்கப்படும் காவலர்களைப் பேச வைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் வாயிலாக, பெண் குழந்தைகள் தைரியமாக தங்களுக்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து நேரடியாக புகார்கள் அளிக்க முடியும். மேலும், மாணவிகளும் பாதுகாப்பாக இருக்கலாம்,” எனத் தெரிவித்தார்.