மதுரை: பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - மதுரை இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் - கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை ஒத்தது) ரயில் சேவை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 13) இயக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர் - மதுரை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06161) சென்னையில் இருந்து ஜனவரி 13 அன்று மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், கூடல் நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்: தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
இதே போன்ற மெமு ரயில் சேவையை கடந்த தீபாவளியை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே அறிமுகம் செய்திருந்தது. அம்முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பொங்கல் தொடர் விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தெற்கு ரயில்வே தற்போதும் போன்ற மெமு ரயில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.