சென்னை: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு மும்மொழி கொள்கைக்கு எதிராக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோலமிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
அயப்பாக்கம் ஊராட்சி ஹவுசிங் போர்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு கோலமிட்டதோடு இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கோலமிட்டு இருந்தனர்.
இதுகுறித்து பேசிய பெண்கள் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டாம், எங்களுக்கு தமிழ் மொழி இருக்கிறது. மேலும் தேவைப்பட்டால் ஆங்கிலத்தை பயன்படுத்தி கொள்வோம் என்றும், திட்டமிட்டு தங்களுக்குள் இந்தியை திணிக்க வேண்டாம், அதேபோன்று மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இந்தியை திணிக்க வேண்டாம் என்று பேசிய மற்றொரு பெண், “தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜிஎஸ்டி தொகையை வாங்கிக் கொண்டு எங்களுக்கு பிச்சை போடுவது மத்திய அரசு செயல்கள் உள்ளது. எங்களது நிதியை மத்திய அரசு தர வேண்டும். இந்தியாவிலேயே கல்வி உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழ்நாடு தான் முன்னொடி.
இதையும் படிங்க: நவீன தீயணைப்பு வாகனம் மற்றும் புதிய ஆம்புலன்ஸ்கள்!.. பலம் பெறும் சென்னை விமான நிலையம்! - CHENNAI AIRPORT FACILITIES
இந்தியை விருப்பம் உள்ளவர்கள் படிக்கட்டும். வங்கி, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் பணியில் உள்ளனர். வடஇந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது” என்றார்.