சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (42). இவரின் மனைவி தவமணி (38). இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் மகளும், 5 வயதில் ஒரு மகனும் என மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அசோக்குமார் நெய்வேலியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் நிலையில், உறவினர்கள் கூறிய சமாதானத்தின் பேரில் தமது குடும்பத்தைக் காண, அசோக்குமார் நெய்வேலியில் இருந்து சேலத்துக்கு நேற்றிரவு வந்துள்ளார்.
ஆனால் அப்போதும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அசோக்குமாரின் உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தவமணி மற்றும் அவரது மற்றொரு மகள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அசோக்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரட்டைக் கொலை வழக்கு: இதுவரை 6 பேர் கைது.. மேலும் ஒரு போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
தொடர்ந்து, ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் அசோக்குமாரிடம் விசாரணை நடத்தியதில் அவரது தலையிலும் வெட்டுக்காயம் இருந்தது தெரிய வந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளை அசோக்குமாரே அரிவாளால் வெட்டிவிட்டு நாடகம் ஆடுகிறாரா? அல்லது வேறு யாராவது இக்கொலைகளை செய்துள்ளார்களா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் விசாரணை நடத்தினார் .
விசாரணையில், 'அசோக்குமார், தமது மனைவி மற்றும் குழந்தைகளை அரிவாளால் வெட்டியது உறுதியானது. மேலும் அவரது கையில் இருந்த அரிவாள் அவர் தலையிலும் பட்டு காயம் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. நேற்றிரவு முழுக்க அசோக்குமார் மற்றும் அவரது மனைவி தவமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அதன் முடிவாக அசோக்குமார் மனைவி மற்றும் குழந்தைகளை அரிவாளால் வெட்டியுள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அசோக்குமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். அவர் தொடர்ந்து தங்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.