சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அங்கு நடைபெற்று வரும் விற்பனை மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு சகாய விலையில் கிடைப்பதற்காக இந்த சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சி தொடங்கப்பட்டு தற்போது மூன்றாவது ஆண்டாக இந்த சந்தை செயல்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 600 வாகனங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மஞ்சள், இஞ்சி, கரும்பு, தோரண குருத்துப் போன்றவைகள் கொண்டுவரப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்: தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
கடந்த ஆண்டு போலவே கரும்பு வண்டிகளுக்கு ரூ.1500 வாடகை என்றும், கரும்பில்லாத மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு ரூ.1000 என்று கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் அதே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கி செல்வதற்காக அமைக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் உள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் சற்று காலம் அதிகரித்து வியாபாரம் நடப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
வியாபாரிகள் என்ன கோரிக்கை வைத்தார்களோ, உடனுக்குடன் குப்பை அகற்றும் பணி, பாதுகாப்பு கருதி கூடுதல் காவலர்கள் பொறுத்தப்படுத்துள்ளனர். அதிகமான போக்குவரத்து காவலர்களைக் கொண்டு போக்குவரத்து சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்று உணர்ந்து டெபாசிட் கூடக் கிடைக்காது என்பதற்காக தான் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வைத்து தற்போது ஓட்டம் பிடிக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நிச்சயமாக உதயசூரியன் தகத்தகவென்று உதிக்கும்” என்றார்