சேலம்: நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் அனைவரும் சமத்துவ பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், பெரியார் பல்கலைக்கழகத்திலும் சமத்துவ பொங்கல் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவை பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான குற்றவியல் விசாரணையை உயர் நீதிமன்றம் விரைந்து நடத்துவதற்கு உத்தரவிட்டு உள்ளது.
ஊழல் காரணமாக முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்ய தமிழக அரசு இரண்டு முறை அறிவுறுத்தியும், துணைவேந்தர் அவரை பணியில் இருந்து விடுவிக்காததை கண்டித்து பணி நேரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த தொகுப்பூதியப் பணியாளர்கள் மீது விசாரணை குழுவை அமைத்த துணை வேந்தருக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும், இன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக விசாரணை வளையத்திற்குள் உள்ள துணை வேந்தர் நிகழ்த்தும் சமத்துவப் பொங்கலை புறக்கணிக்க தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்: தமிழ்நாடு அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
இதை முடக்குவதற்காக துணை வேந்தரின் கைப்பாவையான நூலகர் ஜெயபிரகாஷ் தனது நூலகத்தில் பணியாற்றும் தொகுப்பு ஊதியப் பணியாளர்களை மிரட்டும் வகையில் அவர்களுக்கு பொங்கல் விழா பணியினை ஒதுக்கியுள்ளார். பதிவாளர் இதற்கு அனுமதி அளித்தாரா? என்று தெரியவில்லை.
பல்கலையில் பதிவாளர் தேர்வாணையர் நிதி அலுவலகம் தொலைநிலைக் கல்வி என்று பல்வேறு அலுவலகங்கள் இருக்கும் நிலையில், நூலகத்தில் பணியாற்றும் தொகுப்பு ஊதியப் பணியாளர்களுக்கு மட்டும் மணி ஒதுக்கி மிரட்டல் விடுக்கும் பல்கலைக் கழக நூலகரின் இந்த அடாவடிச் செயலை தொழிலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை பல்கலை மாணவர்களின் நலனுக்காகவும், பல்கலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்படும் சமத்துவ பொங்கல் விழாவை புறக்கணித்துள்ளது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.