கோயம்புத்தூர்: கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை புரிந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவை ஒரு தேர்தலை புறக்கணிப்பது என்பது ஒரு அபூர்வமான விஷயம். ஈரோட்டில் இடைத்தேர்தலுக்கு ஒரு இடைத்தேர்தலாக இம்முறை நடைபெறுகிறது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக் கூடிய தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பாஜகவின் கோரிக்கையை ஆராய்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கோரிக்கைகளை ஆராய்ந்து இதற்கு அனுமதி அளித்துள்ளார். எங்கேயும் தேர்தலை புறக்கணிக்காத பாஜக, நக்சல் பெல்ட் ஆக இருந்தாலும் சரி, தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தலை எதிர்கொண்டது.
ஆனால், தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை சில கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளது. இது போன்ற தேர்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில் தவறு செய்யும் கட்சிக்கு நிச்சயமாக மக்கள் சாட்டையடி கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். பணம், கொலுசு என, 15 நாட்களுக்கு தேர்தலையே கேவலப்படுத்தும் முயற்சியில் திமுக செயல்பாடுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் ஓட்டுக்காக வெள்ளி கொலுசு கொடுங்கள், தரமான ஹாட் பாக்ஸ் கொடுங்கள் ஆனால் மறந்து போய் பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் படத்தை போட்டு விடாதீர்கள்” என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு: எதிர்க்கட்சிகளை தன் பாணியில் கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன்!
பெரியார் பற்றி 1968-ல் முரசொலி இதழின் பொங்கல் மலரில் வெளியிட்டுள்ளதையும், அண்ணாமலை காண்பித்தார். சீமான் அவரது இயக்கத்தின் கருத்தை முன் வைத்துள்ளார். பெரியாரை பாஜக பார்க்கும் சிந்தனை மாறவில்லை. நான் பெரியாரைப் பற்றி பேசுகிறேன். டங்க்ஸ்டன் விவகாரத்தில் உண்மைக்கு மாறான விஷயங்கள் பேசி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நீட் விவகாரம் மற்றும் கண்ணுக்கு தெரியும். திராவிடியன் மாடல் டிசாஸ்டர் மாடலாக மாறுவதற்கு உதயநிதி ஓர் உதாரணம்.
உதயநிதி ஸ்டாலின் போன்று முட்டுக் கொடுப்பதற்கு ஒரு சந்தானமும், ப்ரொடியூஸ் செய்வதற்கு ஸ்டாலினும் இருப்பது போல் அஜித் இல்லை. அஜித் தனிமனிதனாக திறமையால் வளர்ந்தவர்” என்றார்.
தேர்தல் வரும் பொழுது பணம் கொடுக்கலாம் என்று துரைமுருகன் பேசியது குறித்தான கேள்விக்கு, “அரசியலில் ஒரு வயது வந்தவுடன் ரிட்டயர்மென்ட் வேண்டும். அதற்கான கிளாசிக் உதாரணம் துரைமுருகன். சூப்பர் ஸ்டார் ரஜினி மேடையில் சிலருக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து விடலாம் என்று கூறியிருந்தார். துரைமுருகன் பேசும் பொழுது அவர் ரிட்டயர்மென்ட் வயதை எட்டி விட்டார் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.