தூத்துக்குடி: தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலை சிலம்பம் மற்றும் பொங்கல் பண்டிகையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் தேரிக்காடு பகுதியில் 'சிலம்பம் பொங்கல்' கொண்டாடப்பட்டது. தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பையும், உற்சாகத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகையாக இருந்து வருகிறது.
மேலும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தைப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புது முயற்சியாக, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் கராத்தே மற்றும் சிலம்பம் பள்ளி சார்பாக பாரம்பரிய முறைப்படி தேரிக்காட்டில் சிலம்பம் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: போகி பண்டிகையையொட்டி புகைமண்டலமான சென்னை - நள்ளிரவு பெய்த மழையால் சமநிலையில் காற்று மாசு..
இதில் சிறுவர்கள், பெரியவர் என 50க்கும் மேற்பட்டபவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை, முண்டாசு அணிந்து, பொங்கல் பானை முன் தனியாகவும், குழுவாகவும் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தி பொங்கலிட்டு கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து, சிலம்பம் கம்புகள், சுருள்வால், உள்ளிட்ட தற்காப்புக் கலை ஆயுதங்களை வைத்து சிலம்பம் சுற்றி பாரம்பரியத்தை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனியார் கராத்தே மற்றும் சிலம்பம் பள்ளி மாஸ்டர் டென்னிசன் செய்திருந்தார்.