விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கிழக்கு மக்கள் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டனர். இனிமேலும் சீமான் பாடம் கற்கவில்லை என்றால் மீண்டும் அவருக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் நேற்று (பிப்.12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், எம்பியுமான கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கனிமொழி,'' சீமானிற்கு மக்கள் சரியான பாடத்தை கற்று கொடுத்து விட்டார்கள். இதன் பிறகும் அவர் பாடம் கற்கவில்லை என்றால் இன்னும் பெரிய பாடங்களை கற்று கொடுப்பார்கள்'' என்றார்.
பிரசாந்த் கிஷோர் - விஜய் சந்திப்பு
தொடர்ந்து பேசியவர், '' பிரசாந்த் கிஷோர் தொழில்முறை வியூக வகுப்பாளர். திராவிட முன்னேற்ற கழகம், கட்சி தொண்டர்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது. முதலமைச்சர் எந்த வழியை காட்டுகிறாரோ, அந்த வழியிலே செயல்பட இங்கே இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக தலைவர்களும், தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு எந்த வித சிக்கலும் கிடையாது.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் உட்பட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசிதழ்!
கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம்
மாணவிகள் மீதான இத்தகைய வன்கொடுமை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. குற்றங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நிச்சயமாக இன்னும் விழிப்புணர்வும், சமூக மாற்றமும் முக்கியமான ஒரு விஷயம். பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். அங்கே பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்வது மனதை பதற வைக்கிறது.
கடுமையான சட்டங்கள்
குற்றவாளிகள் மீது எந்த பாரபட்சமும் காட்டப்படுவது கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான கடுமையான சட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்'' என்று கூறினார்.