சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 - 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவையின் போது, மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்" என்று அறிவித்தார். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சியை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம் மற்றும் பிற காரணங்கள் அடிப்படையிலும், இந்த மூன்று பேரூராட்சிகளின் வரலாறு மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
![தமிழக அரசு அரசிதழ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/23532392_che.png)
இதையும் படிங்க: இலவச திட்டங்கள் அறிவிக்கும் நடைமுறையை ஏற்றுகொள்ள முடியாது...உச்ச நீதிமன்றம் கருத்து!
மேலும், இந்த அறிவிப்பு குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.