இந்திய மொபைல் பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) அறிமுகம் செய்யப்பட்டன. சீனாவில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஒன்பிளஸ் 13 மாடல் போனின் விலை ரூ.69,999 முதலும், ஒன்பிளஸ் 13ஆர் பட்ஜெட் பிரீமியம் மாடல் போனின் விலை ரூ.49,999 முதலும் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. பல மேம்பட்ட அம்சங்களை தங்களின் புதிய பிரீமியம் மாடலில் ஒன்பிளஸ் நிறுவனம் சேர்த்துள்ளது.
குறிப்பாக, இரண்டு மாடல்களிலும் வளைவில்லாத நேரான ஃபிளாட் ஓ-எல்.இ.டி (OLED) டிஸ்ப்ளே, 6,000mAh பேட்டரி, புதிய ஸ்னாப்டிராகன் எலீட் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் போன்ற பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கேமராவிலும் இம்முறை ஒன்பிளஸ் எந்த குறையும் வைக்காமல், திறன்வாய்ந்த லென்ஸுகளைப் பயன்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் 13 மற்றும் 13ஆர் விலை:
ஒன்பிளஸ் 13 மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.69,999 ஆகவும், 16ஜிபி + 512ஜிபி வகையின் விலை ரூ.76,999 ஆகவும், 4ஜிபி ரேம் + 1டிபி வகையின் விலை ரூ.89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவை மிட்நைட் ஓஷன், பிளாக் எக்லிப்ஸ், ஆர்க்டிக் டான் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.
மறுபுறம், ஒன்பிளஸ் 13ஆர் போனைப் பொருத்தவரை, இரண்டு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. 12ஜிபி+256ஜிபி வகையின் விலை ரூ.42,999 ஆகவும், அதேசமயம் 16ஜிபி+512ஜிபி வகையின் விலை ரூ.49,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்ட்ரல் டிரயல், நெபூலா நொய்ர் என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன்களை பயனர்கள் வாங்கலாம்.
ஒன்பிளஸ் பயனர்கள் புதிய 13 சீரிஸ் போன்களுக்கு ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடிகளைப் பெறலாம். கூடுதலாக ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தினால், அதன் அடிப்படை மாடலில் ரூ.5,000 தள்ளுபடியைப் பெறலாம். அதாவது ஒன்பிளஸ் 13 அடிப்படை மாடல் போனை வெறும் ரூ.64,999-க்கு வாங்கலாம்.
ஒன்பிளஸ் 13 அம்சங்கள்:
ஒன்பிளஸ் 13 போனில், 6.82 அங்குல குவாட் எச்டி+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 1,600 நிட்ஸ் பிரைட்னஸ், 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் இருக்கிறது. இந்த போனை குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இயக்குகிறது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்சிஜன் இயங்குதளம், கூகுள் ஜெமினி ஏஐ ஆகியவை நிர்வகிக்கிறது.
கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் மூன்று லென்ஸுகள் கொண்ட அமைப்பை ஒன்பிளஸ் 13 மாடல் கொண்டுள்ளது. அதின் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியன சிறந்த படப்பிடிப்பிற்காக இணைக்கப்பட்டுள்ளன.
முன்பக்கம், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனை திறன்பட இயக்க 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் திறன்கொண்ட விரைவான சார்ஜிங் ஆதரவும், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளன.