கோயம்புத்தூர்: கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில், '' மதுரை மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இன்று (ஜன.23) மாலை 4.30 மணிக்கு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் 20,000 பேருக்கு மேலாக மன நிம்மதி இல்லாமல் இருந்தார்கள். அவர்கள் இன்று நிம்மதியாக தூங்க செல்லலாம். பிரதமர் மற்றும் அமைச்சர் கிஷன்ரெட்டி ஆகியோரிடம் டங்ஸ்டன் திட்ட ரத்து கோரிக்கையை எடுத்து சென்றோம். சமணர் படுகை, பெரியார் பாசன ஒருபோக விவசாயம் என வாழ்வாதாரம் இருக்கும் நிலையில், அவர்களுக்காக இந்த டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வர வேண்டாம் எனக் கூறி ரத்து செய்துள்ளோம்.
பிரதமருக்கு நன்றி
இந்திய அரசு மூலமாக ஒரு திட்டத்தை ரத்து செய்வது எவ்வளவு கடினம் என்பது தெரியும். பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று டெல்லிக்கு வந்த அரிட்டாபட்டியை சேர்ந்த குழுவினர் உள்ளிட்ட அனைவரும் உத்தரவு நகல் இல்லாமல் ஊருக்கு செல்ல முடியாது என்று டெல்லியில் இருக்கின்றனர். நாளை காலை அவர்கள் உத்தரவுடன் வருவார்கள். அவர்களுக்கும் நன்றி'' என கூறினார்.
இரும்பின் காலம்
தொடர்ந்து இரும்பு தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட தகவல் குறித்த கேள்விக்கு, '' உலகின் தொன்மையான மொழி தமிழ் எனவும், கலாச்சாரம், ஆதி கலாச்சாரம் இங்கிருந்து தான் உருவாகிருக்க முடியும்.
முதலமைச்சர் 5,300 ஆண்டுகளுக்கு மேலாக என ஒரு வரலாற்று சான்றை முன் வைத்திருக்கிறார். அறிவியல் வளர, வளர நிறைய விஷயங்கள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். கார்பன் டேட்டிங் முறைகளில் பார்க்கும் பொழுது இன்னும் கூடுதலான தகவல்கள் கிடைக்கலாம். ஒவ்வொரு தமிழருக்கும் சந்தோசமான விஷயம் இது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு இங்கு இருந்தது என்பது முக்கிய வரலாற்றுச் சான்று, இதற்கு பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ''திருப்பரங்குன்றத்தில் தான் எனது விரதத்தை முடிக்க இருக்கிறேன். திமுக தூண்டுதலில் ஐயூஎம்எல் எம்.பி நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையில் இறைச்சி சாப்பிட்டு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளார். விரைவில் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து எழுச்சி மிக்க போராட்டம் நடத்தப்படும்.
கச்சத்தீவு
கச்சத்தீவு விவகாரத்தை ராஜதந்திரம் என செல்வபெருந்தகை சொல்வது முட்டாள்தனம். கச்சத்தீவை எந்த சட்ட திருத்தமும் கொண்டு வராமல், சுயலாபத்துக்காக, நட்புறவோடு இருக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டது. கச்சத்தீவை கொடுத்ததால் நமக்கு என்ன பலன் கிடைத்து இருக்கிறது? எதுவும் கிடைக்கவில்லை.
கச்சத்தீவை கொடுத்தற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று திமுகவும், காங்கிரசும் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவில் மக்களின் உரிமையை நிலைநாட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
விஜய், சீமான் ஆகியோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. சென்னைக்கு விமான நிலையம் வேண்டுமா என்றால் கட்டாயம் வேண்டும். விஜய் சொல்லிய கருத்தில், ஏதாவது சரி செய்ய முடியும் என்றால் மாநில அரசு முயற்சிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையம் இப்போது துவக்கினாலும் முடிக்க 10 ஆண்டுகளாகிவிடும். பரந்தூர் விமான நிலைய பிரச்சனையை மாநில அரசு தீர்க்க வேண்டும்'' என அண்ணாமலை கூறினார்.