மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடக்கி வைத்தார். ஆன்மீகம் மற்றும் கலைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதையடுத்து மேடையில் பேசிய அவர், “ஒற்றைக் காலை நிலத்தில் தாங்கி நடனமாடுபவரும், தலையில் கங்கை நீரை சுமப்பவரும், கையிலே அக்னி என்னும் நெருப்பை சுமப்பவரும், இடுப்பிலே அணிந்து காற்றிலே ஆடிக்கொண்டிருக்கும் உதகபந்தத்தை அணிந்தவரும், விஸ்வரூபமாய் விண்ணையே அளந்தவருமான அடிமுடி காணாதவர் சிவபெருமான்.

இவர் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களை தன்னுள்ளே அடக்கி ஆனந்த தாண்டவம் ஆடும் அம்பலத்தான். சிதம்பரத்திலே பொற்சபையிலும், திருவாலங்காட்டில் ரத்தினசபையிலும், மதுரையிலே வெள்ளிசபையிலும், திருக்குற்றாலத்திலும் சித்திரசபையிலும், திருநெல்வேலியிலே தாமிர சபையிலும் என பஞ்ச சபைகளில் அவர் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துகிறார். ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை அவர் புரிகின்றார்.
இவ்வாறு ஐம்பூதங்கள், ஐந்து சபை, ஐந்து தொழில் ஆகியவற்றை உள்ளடக்கியவராக இறைவன் உள்ளார். இதன் அடிப்படையிலேயே பரதமுனி பரத சாஸ்திரங்களை உருவாக்கியுள்ளார். திணைகளையும், காப்பியங்களையும் ஐந்தாகவே பிரித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதான சிலப்பதிகாரம் நிகழ்ந்த சிறப்புக்குரிய இந்த மண்ணில் இந்த நாட்டியாஞ்சலி நடைபெறுவது சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது” என்றார்.

முன்னதாக, திருக்கோவிலூர் பாலாஜி குழுவினரின் மங்கள இசையுடன் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. கோவை ஸ்ரீநாட்ய நிகேதன் மாணவிகள் ’கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய பரதம், சென்னை கிருஷ்ணா நாட்டிய பள்ளி குரு ஷோபனாவின் மாணவிகள் நடத்திய நாட்டிய நிகழ்ச்சி, மயிலை சப்தஸ்வரங்கள் மாணவிகள் நிகழ்த்திய ராமாயணம் நாட்டிய நாடகம், வாலாஜா லாஸ்யா பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டர் மாணவர்களின் பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
இதையும் படிங்க: 100 பூக்களின் பெயரை மூச்சு விடாமல் சொன்ன நடிகர் சிவகுமார்; ஆர்ப்பரித்த பள்ளி மாணவர்கள்
இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலியை கண்டு மகிழ்ந்தனர். நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.