தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நாளை நடைபெற இருந்த பணியாளர்கள் தேர்வு ரத்து! - பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு

Nuclear Power Plant: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை நடைபெற இருந்த பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நாளை நடைபெற இருந்த பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நாளை நடைபெற இருந்த பணியாளர்கள் தேர்வு ஒத்திவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 6:45 PM IST

Updated : Mar 2, 2024, 9:57 PM IST

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (மார்.3) நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆர்பித் ஜெயின், வள்ளியூர் டிஎஸ்பி யோகெஷ் குமர், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அணுமின் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒன்று மற்றும் இரண்டாம் அணு உலைகளின் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக நான்கு அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் பி பிரிவுகள் காண பணியாளர்கள் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியது.

இதில் சி பிரிவில் 117 பணியாளர் பணியிடங்களும் பி பிரிவில் 62 பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற மார்ச் மூன்றாம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்படுவதாக விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் கூடன்குளம் அணுமின் நிலையம் சார்பில் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 1999ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவுகளுக்கான பணியிடங்களை அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கும் படித்த கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ளூர் மக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் தனவேல் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி தற்போது நாளை சி பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்ற சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு நேற்று இந்திய அணுசக்தி துறை செயலாளருக்கு அவசர கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இன்று கூடங்குளத்தில் நெல்லை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் தலைமையில் ராதாபுரம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கூடங்குளம் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் 1999 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடியே அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும், என்றும் நாளை கூடங்குளம் அணுமின் திட்டத்தின் சார்பாக நடைபெற இருக்கின்ற எழுத்து தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கும் இப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு மட்டும் மேற்படி வேலையை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: “இடம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை” - கூடங்குளம் சி பிரிவு தேர்வு தொடர்பாக அப்பாவு கடிதம்!

Last Updated : Mar 2, 2024, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details