சென்னை: தாம்பரம் அடுத்த வண்டலூர் ரயில் நிலையத்திற்கும், பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று (பிப்.11) நள்ளிரவில் இரு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தாம்பரம் ரயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த ரத்த காயங்களுடன் இளைஞர் மற்றும் இளம்பெண் சடலமாக கிடந்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவரது சடலங்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தாம்பரம் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21), சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி, உயிரிழந்த இருவரும் வண்டலூர் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இருவரும் காதலர்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்?.. காதலியின் தாயை கொலை செய்த காதலன்.. சென்னையில் அதிர்ச்சி!
மேலும், நேற்றிரவு இருவரும் பேசிக்கொண்டு கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியே வந்த மின்சார ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
போலீசார் இந்த விபத்து குறித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இருவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் தாம்பரம் ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் அருகே காதல் ஜோடி நள்ளிரவில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் போது மின்சார ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.