திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி முருகன் கோயில். இங்குப் பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூசத் திருவிழா மலை அடிவாரத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று (பிப்.11) மாலை தைப்பூசத்தன்று தேரோட்டம் நிகழ்வு பெரு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனைச் சிறப்புத் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று எட்டாவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து பழனிக்கு வந்துள்ள முருக பக்தர்கள் மலையடிவாரத்தில் காவடிகளைச் சுமந்து, கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், இன்றைய தினம் மலைக் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!
பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் பாதுகாப்பு கருதிக் கூட்ட நெரிசலைத் தவிர்த்து விரைவாக சாமி தரிசனம் செய்ய போலீசார் மற்றும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளனர். இந்நிலையில் இன்று முருகன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கும்பமேளாவில் பங்கேற்க வந்தவர்கள் பழனி தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு, முருக பக்தர்களுடன் சேர்ந்து ஆட்டம் ஆடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.