சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. கட்சி சசிகலா வசம் ஆனது. அவர் சிறைக்கு சென்ற பின்னர் கட்சி எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இவ்வாறு கட்சியில் ஏற்பட்ட பிளவால் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலா என நான்கு பேரும் பிரிந்து கிடக்கின்றனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை வழி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னம் விவகாரத்தில் அடிப்படை உறுப்பினருக்கு தலையிட உரிமை உண்டு என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம், கே.சி. பழனிசாமி, புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: முதன்முறையாக மாநிலங்களவை செல்கிறதா தேமுதிக? பிரேமலதா விஜயகாந்த் தகவல்!
இதனை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் தரப்பு சார்ந்த மனுக்களை விசாரிக்க கூடாது எனவும் உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்து தடை வாங்கினார்.
இந்த தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (பிப் .12) வெளியானது. அந்த தீர்ப்பில், தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் எடப்பாடி பழனிசாமி பெற்ற தடையை நீக்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓபிஎஸ் கருத்து
இந்நிலையில், இன்று தேனியில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ''நீதிமன்றங்களுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கும் உண்டு என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் விசாரணை செய்யலாம் என்பது தீர்ப்பாகியுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதோடு 'தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அந்த தீர்ப்பின் மூலம் வெளியாகி உள்ளது'' என தெரிவித்தார்.