கோயம்புத்தூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அதில், கோவை நாடாளுமன்றத் தொகுதியானது, கோயம்புத்தூர் வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில், 10 லட்சத்து 41 ஆயிரத்து 349 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 64 ஆயிரத்து 394 பெண் வாக்காளர்கள் மற்றும் 381 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, திமுக, அதிமுக, பாஜக மற்றும் 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கோவை மக்களவை தொகுதியில் 582 மையங்களில் 2 ஆயிரத்து 59 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள், வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய மாலையுடன் நிறைவடைந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 64.42 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
வ.எண் | தொகுதிகளின் பெயர் | வாக்குகளின் எண்ணிக்கை (%) |
---|---|---|
1. | கோவை வடக்கு | 58.74 % |
2. | கோவை தெற்கு | 59.25 % |
3. | சிங்காநல்லூர் | 59.33 % |
4. | கவுண்டம்பாளையம் | 66.42% |
5. | பல்லடம் | 67.42% |
6. | சூலூர் | 75.33 % |