சென்னை:தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையின் நான்காவது மலர் கண்காட்சி ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கி ஜனவரி 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செம்மொழி பூங்காவில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "சென்னையின் நான்காவது மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்களுடைய 30 லட்ச மலர் தொட்டிகள் கண்காட்சிக்காக வைக்கப்படும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மலர்களை யானை, மயில், ரயில், ஆமை, படகு, வண்ணத்துப்பூச்சி, அன்னப்பறவை, நடனமங்கை என 20 வகையான வடிவங்கள் அமைக்கப்பட உள்ளது. ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் கட்டணம் விவரம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
முதல்முறையாக சென்னையில் கடந்த 2022ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் இந்த மலர் கண்காட்சி நடைபெற்றது. அப்போது 44 ஆயிரத்து 888 பேர் பார்வையிட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் செம்மொழி பூங்காவில் இரண்டாவது முறையாக மலர் கண்காட்சி நடைபெற்றது. அதில் 23 ஆயிரத்து 302 பேர் பார்வையிட்டனர்.