கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் மயங்க நிலையில் கிடத்ததை நேற்று (மே 30) வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அத்துடன், குட்டி யானையும் இருந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்து, தொடர்ந்து பெண் யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
நேற்று முழுவதும் குளுக்கோஸ், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஓரளவிற்கு உடல்நிலை தேறிய பெண் யானையை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தினர். இதனையடுத்து, பெண் யானையின் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கிடையே, குட்டி யானை தாய் யானையுடன் பால் குடித்தது.
இது குறித்து பேசிய கால்நடை மருத்துவர் சுகுமார், “உடல் நலக்குறைவால் இருந்த அந்த பெண் யானை 40 வயது மதிக்கத்தக்கது. அந்த பெண் யானையுடன் இருந்த குட்டி யானை பிறந்து மூன்று, நான்கு மாதங்கள் இருக்கும். பெண் யானை உடல் நலக்குறைவாக இருந்த நிலையில், நேற்று மட்டும் சுமார் 30 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டது.
அதேபோல், இன்றைய தினமும் 30 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்பட்டதோடு, எதிர்ப்புச் சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது. நேற்றைய தினம் யானைக் கூட்டம் அந்த குட்டி யானையை அழைத்துச் சென்று விடும் என்று எண்ணிய நிலையில், அது நடைபெறாததால் இன்றும் குட்டி யானையை வைத்துக் கொண்டே அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.