சென்னை:டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்றிரவு கைது செய்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது கைதுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக சார்பில் எம்.பி தயாநிதி மாறன் தலைமையில் தென்னக ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தயாநிதி மாறன், வாஷிங் பவுடர் நிர்மலா சீதாராமன் பாஜகவிற்கு வரும் அனைவரையும் சுத்தமாகி விடுகிறார்கள் என சாடினார். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய மக்கள் கொண்டு வரப் போகிறார்கள், குறிப்பாக இந்தியக் கூட்டணி கொண்டு வரப் போகிறது. இந்த அச்சத்தால் மோடியும் நிர்மலா சீதாராமனும் கைது செய்கிறார்கள்.
பாஜக தான் ஊழல் கட்சி, மோடி தான் மிகப்பெரிய ஊழல்வாதி, எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுகிறேன் என்று சொல்லி ஒரு செங்கல்லை வைத்து ஏமாற்றினீர்களே அதை உலகறிய வைத்தார் உதயநிதி ஸ்டாலின் என உரையாற்றினார்.