தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உருவாகிறது ஃபெங்கால் புயல்! உஷார் நிலையில் தமிழகம் - CYCLONE FENGAL

ஃபெங்கல் புயல்
ஃபெங்கல் புயல் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 9:36 AM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் சுமார் 10 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்தது என்றும், நேற்றிரவு (நவம்பர் 26) 11:30 மணி நிலவரப்படி, இது இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிமீ, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 470 கிமீ, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 580 கிமீ மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 670 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 27) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரையை ஒட்டி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை:

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது:

  • அதீத கனமழை: மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகள்.
  • மிக கனமழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தனித்த இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
  • கனமழை: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தனித்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

LIVE FEED

10:56 PM, 27 Nov 2024 (IST)

தஞ்சையில் கன மழையால் 270 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு..!

தஞ்சை மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆயத்தப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில், கன மழையால் சுமார் 8 கிராமங்களில் 270 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

9:43 PM, 27 Nov 2024 (IST)

வடதமிழ்நாடு-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது. மேலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 500 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதுமட்டும் அல்லாது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. மேலும், வடதமிழ்நாடு-புதுச்சேரி இடையே வரும் 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:53 PM, 27 Nov 2024 (IST)

கடலில் உள்ள மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கடலோர காவல் படை..!

வங்கக்கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது கடலில் உள்ள மீன்பிடி படகுகள் விரைவில் கரைக்கு திரும்புமாறு கடலோர காவல் படை சார்பில் அதன் ரேடார் நிலையங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6:53 PM, 27 Nov 2024 (IST)

தஞ்சையில் பேரிடர் மீட்புப் படையினர் செயல் விளக்கம்..!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உதவி கமாண்டன்ட் ஸ்ரீ ஸ்ரீதர் ஆர் மேற்பார்வையில், தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் பேரிடர் மேலாண்மை கருவிகளை செயல் விளக்கம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், புயல் கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீ டி.ஆர்.அரவிந்தன், மாவட்ட ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் மற்றும் பிற மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

5:50 PM, 27 Nov 2024 (IST)

ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. 5 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு..!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடலின் சீற்றம் பத்து அடிக்கு மேல் இருப்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது, தொடர் மழை காரணமாக மரக்காணத்தில் சுமார் 3500 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஐந்து கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு (Credits - ETV Bharat Tamil Nadu)

5:02 PM, 27 Nov 2024 (IST)

காரைக்காலில் உள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு..!

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் ஆகியோர், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை பார்வையிட்டனர்.

காரைக்காலில் உள்ள தாழ்வான பகுதிகளில் ஆய்வு செய்த பேரிடர் மீட்புப் படையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

4:34 PM, 27 Nov 2024 (IST)

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய நாளை (நவ.28) முதல் டிச.01ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மழையின் காரணமாக 4 நாட்களும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4:23 PM, 27 Nov 2024 (IST)

அரபிக்கடல் பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை...

இன்று (நவ.27) முதல் நாளை மறுநாள் (நவ.29) வரை தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4:22 PM, 27 Nov 2024 (IST)

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை...

இன்று (நவ.27) காலை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, நாளை மறுநாள் (நவ.29) மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

4:11 PM, 27 Nov 2024 (IST)

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை...

இன்று (நவ.27) காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை (நவ.28) காலை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் சற்று குறைந்து நாளை மறுநாள் (நவ.29) வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் தொடர்ச்சியாக 30ஆம் தேதி காலை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4:01 PM, 27 Nov 2024 (IST)

வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை...

இன்று (நவ.27) காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்; அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, இன்று (நவ.27) மாலை முதல் 30ஆம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3:52 PM, 27 Nov 2024 (IST)

தமிழக கடலோரப்பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை...

இன்று (நவ.27) முதல் நாளை மறுநாள் (நவ.29) வரை தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல, வரும் 30ஆம் தேதி மற்றும் டிச.01ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

3:48 PM, 27 Nov 2024 (IST)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான - கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

3:40 PM, 27 Nov 2024 (IST)

தரைக்காற்று எச்சரிக்கை..!

இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) வரை தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். மேலும், நாளைய தினம் (நவ.28) இதே பகுதியில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்; அதேபோல, ௨௯ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

3:36 PM, 27 Nov 2024 (IST)

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..

இன்று (நவ.27) முதல் டிச.03ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (நவ.27) கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவ.28) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வருகிற 29ஆம் தேதி மற்றும் டிச.01ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; வருகிற 29ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.02ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3:20 PM, 27 Nov 2024 (IST)

அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

நேற்று (நவ.26) காலை 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.27) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் என்றும், அதன் பிறகு மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

3:05 PM, 27 Nov 2024 (IST)

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் கனமழை பதிவான இடங்கள்..!

நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்) 19 செ.மீ வரையிலும்; கோடியக்கரை (நாகப்பட்டினம்), நாகப்பட்டினம் நகர்ப் பகுதிகள், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 18 செ.மீ வரையிலும்; திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 14 செ.மீ வரையிலும்; மண்டலம் 02 D15 மணலி (சென்னை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 13 செ.மீ வரையிலும்; திருவாரூர் (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 12 செ.மீ வரையிலும்; மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), மரக்காணம் (விழுப்புரம்), வடகுத்து (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 11 செ.மீ வரையிலும்; மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாரூர் AWS (திருவாரூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கடலூர் (கடலூர்), காரைக்கால் (காரைக்கால்), நன்னிலம் (திருவாரூர்) தலா 10 செ.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது.

2:40 PM, 27 Nov 2024 (IST)

4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை, கடலூர், நாகை ஆகிய 3 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12:51 PM, 27 Nov 2024 (IST)

ஒன்பது துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

12:38 PM, 27 Nov 2024 (IST)

சென்னைக்கு மழை எப்படி? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

27ம் தேதி சென்னையில் மிதமான மழை பெய்யும்

28ம் தேதி சென்னையில் மிதமான மழை பெய்யும்

29ம் தேதி சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

30ம் தேதி சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 1ம் தேதி சென்னையில் மீண்டும் மிதமான மழை பெய்யும்

12:12 PM, 27 Nov 2024 (IST)

80 அடிக்கு மேல் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 29-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையில் திருச்செந்தூரில் காலை முதலே கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் ஐயப்ப பக்தர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். மேலும், கடலில் தூண்டில் வைத்து சிறுவர்கள் மீன்களை பிடித்து வருகின்றனர்.

11:49 AM, 27 Nov 2024 (IST)

கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்!

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில், கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்நிலையில் மழை வெள்ளம் மற்றும் காற்று அதிகமாக உள்ள பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய 25 பேர் அடங்கிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடலூரில் முகாமிட்டுள்ளனர்.

11:22 AM, 27 Nov 2024 (IST)

மாலை புயலாக வலுபெற வாய்ப்பு?

சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 550 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையில் திரிகோணமலையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 120 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 5:30 மணிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

10:41 AM, 27 Nov 2024 (IST)

ஆபத்தை உணராமல் செல்ஃபி!

காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் வார்ப்புகளின் மீது பொதுமக்களும், இளைஞர்களும் ஆபத்தை உணராமல் கடல் சீற்றத்தை காணுவதற்காகவும், செல்பி எடுப்பதற்காகவும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தால் பாறைகளின் மீது ஏறி நின்று ஆபத்தான நிலையில் செல்பி எடுத்து விளையாடி வருகின்றனர்.

இதனால், விபரீதமான விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனே அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து பொது மக்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் (ETV Bharat Tamil Nadu)

10:03 AM, 27 Nov 2024 (IST)

நாகையில் வெளுத்து வாங்கும் கனமழை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் என்ற அளவில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை மணலியில் 13 சென்டிமீட்டர் என்ற அளவில் மிக கனமழை பெய்துள்ளது.

9:59 AM, 27 Nov 2024 (IST)

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன் மண்டபம் பகுதியை நடுங்க வைக்கும் காற்றின் வேகம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

9:55 AM, 27 Nov 2024 (IST)

மாவட்ட வாரியாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

கனமழை காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details