சென்னை: ’மதகஜராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த ‘மதகஜராஜா', தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஒரு வழியாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு வெளியானதால் ’மதகஜராஜா’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த காலத்திற்கு ஏற்றவாறு அப்டேட்டடாக இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. மதகஜராஜா திரைப்படம் வெளியாகி இதுவரை 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் சுந்தர்.சி முதல் ரசிகர்கள் அனைவரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்தானம் விரைவில் காமெடியனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு வெளியான மதகஜராஜா வசூலில் சக்கை போடு போடும் நிலையில், தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பல படங்கள் ரிலீஸ் செய்ய அந்தந்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’, சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, விஜய் சேதுபதி நடித்துள்ள ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரிலீசுக்கு முன்பே பாராட்டை பெறும் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’! - SJ SURYAH PRAISED DHANUSH MOVIE
அதேபோல் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ’பார்ட்டி’ திரைப்படமும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியான ’அரண்மனை 4’ சென்ற ஆண்டின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சுந்தர்.சி இயக்கியுள்ள மதகஜராஜா வெற்றி பெற்றுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.