மயிலாடுதுறை:சீர்காழி அடுத்த முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், நேற்றிரவு வாஞ்சூர் சோதனைச் சாவடிக்கு பாதுகாப்புப் பணிக்காக தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது சீர்காழி - நத்தம் இடையேயான புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த பேரிகார்டில் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி போலீசார், ராஜேஷின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மரணமடைந்த ராஜேஷின் தம்பி ராஜ்குமார், சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தார். மேலும், இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சங்கரன்கோவில் பகுதியில் வேன் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! டிரைவரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்!
இதனிடையே, சீர்காழி-நத்தம் சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவந்த ராஜேஷ், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம், சீர்காழி - நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இந்த விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். காவலர் ராஜேஷ்-ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:"எதிர்பார்த்த அளவில் ஒன்றும் இல்லை" இன்ஸ்பெக்டரின் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் விரக்தி