தஞ்சாவூர்: தஞ்சாவூர் திலகர் திடலில் அமமுக சார்பில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் (பிப்.11) நடைபெற்றது. இதில் பேசிய டிடிவி தினகரன், "துரோகத்தை தவிர என்ன தெரியும், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க தெரியும், அதை வைத்து ஆட்டம் போடுகிறீர்கள். உங்கள் ஆட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் முடிவுக்கு கொண்டு வருகிற முதல் தேர்தலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டினார்.
மேலும், ஈபிஎஸ் செய்த ஊழல்களால், முறைகேடுகளால் தவறான நிர்வாகத்தால் மக்கள் கொதிப்படைந்து, திமுக திருந்தியிருக்கும் என்று நம்பி திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால், திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் நிதி வாங்கியதோடு சரி, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை, பழைய ஓய்வூதிய திட்டம் ஆகிய எதையும் இந்த அரசாங்கம் அமல்படுத்தவில்லை. கம்யூனிஸ்ட்கள் எதற்கெடுத்தாலும் தெருவில் இறங்கி போராடினார்கள், இன்றைக்கு சத்தமே இல்லை எனக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக திருந்தவே திருந்தாது என்பதில் மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றினார்களோ, அதேபோல இன்றைக்கு தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கு திமுகவின் பின்னணியில் முயற்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் சரி, அவர்கள் அமைத்த இந்தியா கூட்டணியும் (INDIA Alliance) இன்றைக்கு சிதறிப் போய்விட்டது. அதனால், அவர்கள் இப்படி குறுக்கு வழியில் இறங்கிவிட்டனர்.