ஐதராபாத்: 18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் நடத்தப்படும். அதன்படி 2025ஆம் ஆண்டு மெகா ஏலத்துடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
நவம்பர் மாதம் மெகா ஏலத்தை நடத்தை பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட பிசிசிஐ உத்தரவிட்டு இருந்தது. அடுத்த ஐபிஎல் சீசனில் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
2017ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆர்டிஎம் கார்டு முறை கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என பல்வேறு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் வெளியிட்டன.
ரீடென்ஷன் லிஸ்ட்டில் பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்களும் நிகழ்ந்தன. லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கர்ரன், 2024 ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்று தந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.
அதேநேரம் நம்ப முடியாத சில வீரர்கள் அதிக தொகைக்கும் தக்கவைக்கப்பட்டனர். அப்படி அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட டாப் 5 வீரர்கள் குறித்த பட்டியலை இங்கே காணலாம்.
ஹென்ரிச் கிளெசன்:
Heinrich Klaasen (BCCI / IPL) தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் கிளெசன் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகபட்சமாக 23 கோடி ரூபாயை அணி நிர்வாகம் ஊதியமாக ஒதுக்கி உள்ளது. 2024 ஐபிஎல் சீசனில் மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடிய ஹென்ரிச் கிளெசன் 4 அரை சதங்களுடன் மொத்தம் 479 ரன் குவித்துள்ளார்.
விராட் கோலி:
இரண்டாவது இடத்தில் பெங்களூரு வீரர் விராட் கோலி உள்ளார். இந்த முறை பெங்களுரூ அணி, கேப்டன் பாப் டு பிளெசிஸ்சையே கழற்றி விட்டது. அவருக்கு பதிலாக விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. விராட் கோலியை 21 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.
2024 ஐபிஎல் சீசனில் விராட் கோலி மொத்தம் 15 ஆட்டங்களில் விளையாடி 1 சதம், 5 அரை சதங்களுடன் 741 ரன்கள் குவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலி, ஒரு சீசனில் அடித்த இரண்டாது அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2016ஆம் ஆண்டு 973 ரன்கள் விராட் கோலி குவித்துள்ளார்.
நிகோலஸ் பூரன்:
Nicholas Pooran (BCCI / IPL) லக்னோ அணி நிகோலஸ் பூரனை 20 கோடி ரூபாய்க்கு தக்கைவைத்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் அணியில் இருந்து கழண்ட நிலையில், அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ள லக்னோ அணிக்கு நிகோலஸ் பூரனும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஜஸ்பிரீத் பும்ரா:
Jasprit Bumrah (BCCI / IPL) ஐபிஎல் அணிகளில் அதிகபட்ச தொகைக்கு தக்கவைக்கப்பட்ட பந்து வீச்சாளர் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ரா தான். மும்பை அணி அவரை 18 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டது. கடந்த சீசனில் பும்ரா மொத்தம் 13 ஆட்டங்களில் விளையாடி 20 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
சஞ்சு சாம்சன்:
Sanju Samson (BCCI / IPL) ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் நாயகன் சஞ்சு சாம்சன் 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டு உள்ளார். அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் அபார சதம் விளாசிய சஞ்சு சாம்சனை தான் ராஜஸ்தான் அணி நிர்வாகம் மலை போல் நம்பி உள்ளது. கடந்த சீசனில் 15 ஆட்டங்களில் விளையாடிய சஞ்சு சாம்சன் 531 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:சிஎஸ்கேவில் இணையும் ரிஷப் பண்ட்? ஆர்சிபி கேப்டனாக ராகுல்.. ஸ்ரேயஸ் நிலை என்ன?