சென்னை: இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 133 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 23 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடரின் 2வது போட்டி சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் இன்று ஈடுபட்டனர்.
அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மீண்டும் சென்னையில் விளையாடுவது மகிழ்ச்சி. என் குடும்பம் மற்றும் நம் மக்கள் முன் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்கள் சிறப்பானவர்கள். எப்பொழுதுமே இந்திய அணிக்கு விளையாட தயாராக இருக்கிறேன். நான் சிறப்பாக விளையாடுவதற்கு பிட்ச் மற்றும் சூழ்நிலை சரியாக இருந்தது. ஆனால் இது எதுவும் என்னுடைய கையில் இல்லை. சரியான சூழ்நிலை அமைந்ததால் நன்றாக விளையாட முடித்தது. விளையாடும் போது மைதானத்தைப் பொறுத்து போட்டிகள் மாறும்.
சில மைதானங்கள் நாம் பந்து வீசும் போது எடுபடும். சில மைதானங்கள் பந்து வீசும் போது எடுபடாது. அந்த சூழ்நிலையில் நாம் என்ன யோசித்து செயல்படுகிறோமோ அது சிறப்பாக அமைகிறது. என்னைப் பொறுத்தவரை நான் பந்து வீச வரும்போது என் முழு உழைப்பை செலுத்துகிறேன்.
அஸ்வினுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. அஸ்வின் மூன்று விதமான போட்டிகளிலுமே தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வந்துள்ளேன். அஸ்வினுடன் என்னை ஒப்பிடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.
அனைவரும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என விருப்பப்படுவார்கள். இந்திய அணியில் என்னுடைய முழு பங்களிப்பையும் அளித்து வருகிறேன். என்னுடைய உழைப்பு இந்திய அணியில் என்னை எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு செல்வேன். அஸ்வின் 500 விக்கெட்கள் வீழ்த்திருக்கிறார். அதுபோன்ற சாதனையை நான் நெருங்க முடியாது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை ஒப்பிடும் போது சென்னை சேப்பாக்கம் மைதானம் சிறிதாக இருந்தாலும் இருபது ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷத்துடன் தான் விளையாடுவார்கள். அதனை எதிர்கொள்ள பந்து வீச்சாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.