சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என சேப்பாக்கத்தில் குவிந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் தெரிவித்தனர்.
இரண்டாவது போட்டி: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இதில் முதல் போட்டி கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயக்கனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் போட்டியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இன்றையப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முதல் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பின் அந்த அணி களம் இறங்கி உள்ளது. மைதானத்துக்குள் இன்று மாலை 4 மணி முதலே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் பதிவு செய்த டிக்கெட்கள் வைத்திருந்த ரசிகர்கள் 5 மணி முதல் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா வெற்றி பெறும்: இந்த போட்டி குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு ரசிகர்கள் பேட்டி அளித்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த சிங்காரம், "இதுவரை ஐபிஎல் போட்டியை மட்டுமே பார்த்து உள்ளேன், முதல் முறையாக இந்தியா விளையாடும் போட்டியை பார்க்க வந்துள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் போட்டியில் பதட்டம் இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றது இந்த போட்டியில் கண்டிப்பாக இந்தியா வெற்றி பெறும்,"என்றார்.
செங்கல்பட்டை சேர்ந்த மகேந்திரன், "கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும் முதன் முறையாக சர்வதேச போட்டியை பார்க்க வந்துள்ளேன். இந்தியா முதல் பேட்டிங் செய்தால் 200க்கு மேல் அடிக்கும். இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்வது என்றால் இங்கிலாந்து அணியை 100 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெறும். இந்த போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்களை எடுப்பார். சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா ஆகிய மூன்று பேரும் 50 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மைதானம் இந்தியாவுக்கு சாதகம்: சூரியகுமார் யாதவ் இந்திய அணியை அடுத்த உலக கோப்பைக்காக தயார் செய்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்டரின் பந்தில் முதல் பந்தில் பவுண்டரி அடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது,"என தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த சேகர்,"ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானம் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக அமைந்தது போல் இந்த மைதானமும் இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இந்தியா இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும்," என்றார்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராம்,"நான் இதற்கு முன்னர் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையான போட்டியை பார்த்திருக்கிறேன். தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி போட்டியை காண வந்துள்ளேன். கடந்த போட்டியில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. சென்னை அவருடைய சொந்த ஊர் என்பதால் இந்த போட்டியில் அதிக விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது,"என்றார்.