சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
தொடரின் 2வது போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும் ரசிகர்கள் வரிசையாக நின்று மைதானத்திற்குள் செல்வதற்காக மைதானத்தின் அனைத்து நுழைவாயில்களை சுற்றிவும் மரத்தினாலான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தீவிர பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தீவிர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை மாலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து அணி தன் முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த வருண்சக்கரவர்த்தி முதல் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியதுடன், ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
நாளைய இரண்டாவது போட்டி சென்னையில் நடைபெறுவதால் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்து களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.