புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய
பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனையடுத்து அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இறையூர் வேங்கைவயல் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் இங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை பயன்படுத்தியது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலை திறந்து பட்டியல் இன மக்களை வழிபடவும் செய்ய வைத்தார்.
அப்போது கோவிலில் சாமி வந்து ஆடிய பெண்மணி, கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை தரக்குறைவாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர் மற்றும் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
மேலும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விரைவு தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் ஒரு வருடங்களை கடந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்பூர்வமான விசாரணைக்கு திட்டமிட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டனர்.
இவர்களிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஒத்து போகவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் அடுத்தகட்ட முயற்சியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது பலகட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயந்தி சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடர்ந்து கால அவகாசம் வாங்கி வந்ததாக பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.
இதில் தமிழக அரசு தற்போது மூன்று பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக தமிழக அரசு அறிவித்துள்ள மூன்று பேரில் ஒருவரான முரளி ராஜா, வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் காவல்துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.
ஏற்கெனவே இவரிடம் காவல்துறையினரும், சிபிசிஐடி போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும், டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இவருடன் குற்றம்சாட்டப்பட்ட சுதர்சன், ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இதே கிராமத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் மூன்று பேரும் நண்பர்களான நிலையில் சம்பந்தப்பட்ட வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டரை மாற்றியது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும், முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான முத்தையா என்பவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், இதனால் அவரை ஜாதி ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த இழி செயலை செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் இவர்கள் மூவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை வைத்தே இந்த வழக்கு விசாரணையானது நகர்ந்து இருக்கிறது.
இவர்கள் மூன்று பேரையும் ஆரம்பம் முதலே சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையில் வளையத்தில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தப்பட்ட முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த செயலை செய்ததாக தமிழக அரசு வைத்துள்ள அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில், மூன்று பேர் இந்த இழிவான செயலை செய்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்வது குறித்தும், அவர்கள் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த செய்தி தொகுப்பு...