திருநெல்வேலி: வட மாநிலங்களில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாமல் பலர் உயிரிழந்தவர்களின் சடலத்தை பாதுகாப்பற்ற முறையில் பரிதாபத்தோடு பைக்கில் வைத்து கொண்டு செல்வதும், கயிறு கட்டி சாலையில் இழுத்து செல்வதும் போன்ற உருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாவதை பார்த்துள்ளோம்...
உயிருடன் இருக்கும்போது மனநலம் பாதித்த தாயை சைக்கிளில் அமர வைத்து பல்வேறு இடங்களில் சுற்றி வந்த மகன், தாய் இறந்தபோதும் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற நிகழ்வு நெல்லையை கலங்கடித்துள்ளது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தாய் மகன் பாச போராட்டம் முடிவுக்கு வந்ததை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மனநலம் பாதித்த தாய் - மகன்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மீனவன்குளத்தை சேர்ந்தவர் சிவகாமி (65). இவரது கணவர் ஜெபமாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். சிவகாமிக்கு சவரிமுத்து, செல்வம், பாலன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சிவகாமியின் இளைய மகனான பாலன் (40) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், பாலன் கடந்த நான்கு வருடங்களாக தனது தாய் சிவகாமியை சைக்கிளில் வைத்துக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு ஊர் ஊராக அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பாக, நெல்லை மாநகர பகுதியில் பாலன் அடிக்கடி சிவகாமியை கடும் உடல் நல பாதிப்போடு சிரமத்தோடு சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வதை பலர் பரிதாபமாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
அபரீத பற்று
இதனால் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பாலனை கண்டித்து சிவகாமியை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூறியும் அவர் கேட்கவில்லை. ஒருபுறம் பாபுவும் மனநலம் பாதிக்கப்பட்டதால் இதுபோன்ற செயலில் பாலன் ஈடுபட்டாலும் கூட மறுபுறம் தன் தாய் மீது அபரீத பற்று வைத்திருப்பதை உணர முடிந்தது.
மனநலம் பாதிப்பு மட்டுமின்றி 60 வயதை கடந்த தன் தாயை யார் ஆதரவும் இல்லாமல் சைக்கிள் வைத்து நான்கு ஆண்டுகள் பராமரித்து வந்தார் பாலன். சைக்கிளில் வைத்துக் கொண்டே தனது தாயை சாப்பிட வைப்பது, இயற்கை உபாதைகள் கழிக்க வைப்பது என அனைத்தையும் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் நேற்று முன்தினம் சிவகாமிக்கு உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பொதுமக்கள் சிலரின் அறிவுரைப்படி பாலன் தனது தாய் சிவகாமியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்
இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, நேற்று மாலை தாய் சிவகாமியின் சடலத்தை சைக்கிளில் துணியால் கட்டியபடி பாலன் நெல்லை மாநகரில் இருந்து நெல்லை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது சொந்த ஊரான மீனவன்குளத்துக்கு அழைத்துச் சென்றதை சிலர் பார்த்துள்ளனர். இதை கண்டவர்கள் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் பாலனை மடக்கி சிவகாமியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
இன்று (ஜன.24) உடற்கூறாய்வு செய்யப்பட்ட சிவகாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகாமி மருத்துவமனையில் இருந்த போதே உயிரிழந்து அங்கிருந்து சடலமாக அவரை பாலன் தூக்கி வந்தாரா அல்லது மருத்துவமனையில் உயிரோடு அழைத்து வந்து வரும் வழியில் அவர் உயிரிழந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து உறவினர்கள் பாலனிடம் கேட்டபோது, அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.. சரியாக சாப்பிடவில்லை அதனால் வீட்டிற்கு அழைத்து வந்தேன் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மருத்துவமனையில் வைத்தே உயிரிழந்த சிவகாமி உடலை பாலன் சைக்கிள் எடுத்துச் சென்றதாகவும், இந்த விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மிகவும் அலட்சியத்தோடு கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
ஆனால், மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் திட்டவட்டமாக இதை மறுத்துள்ளார். மருத்துவமனையில் வைத்து சிவகாமி உயிரிழக்கவில்லை என்றும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் பாலன் தனது தாயை அங்கிருந்து ஊழியர்களுக்கு தெரியாமல் அழைத்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை
இது குறித்து பாலனின் மூத்த சகோதரர் சவரிமுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '' கடந்த நான்கு ஆண்டுகளாகவே எனது தம்பி அம்மாவை சைக்கிள் வைத்துக் கொண்டு செல்வான். அம்மாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு அம்மாவை பயன்படுத்தி சைக்கிளில் கொண்டு செல்வான். பலமுறை அவனை கண்டித்தும் கேட்கவில்லை.. தற்போது மருத்துவமனையில் அம்மாவை சேர்த்து இருந்தான். அம்மா உயிரிழந்தது தெரியாமல் அவரை சைக்கிளில் கட்டி சாலையில் அழைத்து வந்ததை போலீசார் கவனித்துள்ளனர். அவனிடம் கேட்டதற்கு அம்மா சாகவில்லை தூங்கிக் கொண்டிருக்கிறாள் என கூறுகிறான்'' என்று தெரிவித்தார்.
மருத்துவமனையில் உயிர் இழக்கவில்லை
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலனை ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் கூறுகையில், '' சிவகாமி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். ஆனால், அவரது மகன் பாலன் சிகிச்சை அளிக்க விடாமல் இடையூறு செய்தார். நேற்று காலை யாருக்கும் தெரியாமல் தனது தாயை இங்கிருந்து அவர் அழைத்து சென்று விட்டார். இங்கிருந்து செல்லும்போது சிவகாமி உயிரோடுதான் இருந்தார். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. சிகிச்சையில் இருந்து அவர் தப்பிவிட்டதாக தான் நாங்கள் பதிவு செய்துள்ளோம். இங்கிருந்தபோது உயிர் இழக்கவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.
இனி தாயின்றி பாபு
இதன் மூலம் மருத்துவமனையில் வைத்து சிவகாமி உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது மேலும் மருத்துவமனைக்கு வெளியே உயிரிழந்த சிவகாமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பாலன் சைக்கிளிலேயே வைத்து துணியால் கட்டி ஊருக்கு எடுத்துச் சென்றதும் வழியில் போலீஸிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது.
எது எப்படியோ மனநலம் பாதிக்கப்பட்ட இரு உறவுகள் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாச போராட்டம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. நான்கு ஆண்டுகளாக ஆசை ஆசையாக தாயை சைக்கிளில் வைத்து ஊர் சுற்றிய பாலனுக்கு ''தாய் இறக்கவில்லை தூங்கிக்கொண்டிருக்கிறார்''.