சிட்னி (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ள நிலையில், 5வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. ஸ்விங் பவுலிங்கிற்கு சாதகமான பிட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. ஃபார்மில் உள்ள ஜெய்ஸ்வால் (10), ராகுல் (4), கில் (20) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்த முறையாவது ரன்கள் எடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட கோலி 17 ரன்களில் நடையை கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பண்ட், ஜடேஜா ஓரளவு ரன்கள் சேர்த்தனர். பண்ட் (40), ஜடேஜா (26) சொற்ப ரன்களில் அவுட்டாக, அடுத்த வந்த நிதிஷ் குமார் (0), வாஷிங்டன் சுந்தர் (14) என அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அதிரடியாக தொடங்கியது. 9 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்த நிலையில், பும்ரா, ஆஸ்திரேலியாவின் கோன்ஸ்டாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த பந்திலேயே பும்ரா ஆக்ரோஷமாக பந்து வீச, கவாஜா ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். உடனே பும்ரா, கோன்ஸ்டாஸிடம் சண்டைக்கு சென்ற நிலையில், அம்பயர் குறுக்கிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். பெரும் சலசலப்புக்கு இடையே முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் ஆட்டத்தில் வந்த வேகத்தில் லம்புஷேனே 2 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் கோன்ஸ்டாஸ் (23), ஹெட் (4) ஆகியோர் நடையை கட்ட, ஆஸ்திரேலியா 39 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து திணறியது. இதனைத்தொடர்ந்து சற்று பொறுமையாக ஆடிய ஸ்டிவன் ஸ்மித் (33) ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த வெப்ஸ்டர், கேரி சற்று பொறுமையாக ஆடினர். ஆனால் பிரசித் கிருஷ்ணா அபார பதுவீச்சில் கேரி 21 ரன்களுக்கு அவுட்டானார்.