அகமதாபாத்: இங்கிலாந்து எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களை குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இத்தொடரின் கடைசி போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தமது அணி முதலில் பந்துவீச தீர்மானத்தார்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் கேப்டனும், துவக்க ஆட்டகாரருமான ரோஹித் சர்மா, மார்க் வுட் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பில் சால்ட் வசம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ரோஹித் அவுட்டானால் என்ன? நான் இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு சொல்லாமல் சொன்னதைப் போல, மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் என 102 பந்துகளில் 112 ரன்களை அவர் குவித்தார்.
விராட் கோலி 52, ஸ்ரேயாஸ் ஐயர் 78, கே.எல். ராகுல் 40 ரன்கள் என நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்யவே, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் தரப்பில் அதிகபட்சமாக, அடில் ரஷித் 10 ஓவர்கல் 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க் வுட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சை விளையாட உள்ளது.