டம்புலா:இலங்கையில் 9வது மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன்படி நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
அப்போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து, மகளிர் ஆசிய கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று டம்புலாவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி துவக்கம் தந்தனர். இதில் ஷஃபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய உமா ஷேத்ரி 9 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்தார்.
இவர் சந்தித்த 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும், ரிச்சா கோஸ் 30 ரன்களும் அடித்து வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எட்டியது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.