ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ஷிகர் தவான் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
38 வயதான ஷிகர் தவான் கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இடது கை தொடக்க ஆட்டக்காரரான தவான் இதுவரை 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 ஆயிரத்து 867 ரன்கள் குவித்து உள்ளார்.
மேலும், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர் ஷிகர் தவான். சர்வதேச கிரிக்கெட் தவிர்த்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஷிகர் தவான், இதுவரை 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 769 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணியாக இருந்தவர் ஷிகர் தவான். இந்நிலையில், தனது வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுத்தால் அதில் கதாநாயகனாக யார் நடிக்க வேண்டும் என ஷிகர் தவான் மனம் திறந்துள்ளார்.