தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

56 பந்துகளில் 123 ரன்கள்.. திருப்பூரை சூறையாடிய சாய் சுதர்சன் வெற்றிக்கு பிறகு கூறியது என்ன? - Sai Sudharsan - SAI SUDHARSAN

SAI SUDHARSAN: டிஎன்பில் 8வது சீஸன் குவாலிஃபையர் போட்டியில்  சாய் சுதர்சனின் அதிரடியான சதத்தால், திருப்பூரை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது லைகா கோவை கிங்ஸ்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன் (Credit - TNPL)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 1:05 PM IST

திண்டுக்கல்:தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 8வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் குவாலிஃபையர் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் - சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 201 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ், சாய் சுதர்சனின் அதிரடியான சதத்தால் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஆட்டநாயகன் சாய் சுதர்சன்:இந்த போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்ட சாய் சுதர்சன், ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 123 ரன்களை விளாசினார்.

இதன் மூலம் அதிவேகமாக டிஎன்பில் தொடரில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு முரளி விஜய் 121 அடித்து இருந்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் தகர்த்துள்ளார் சாய் சுதர்சன் (123*). இப்போட்டியில் சாய் சுதர்தன் - முகிலேஷ் ஜோடி மொத்தம் 148 ரன்களை குவித்தது. இதில் முகிலேஷ் 48 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சதம்:போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சாய் சுதர்சன் கூறியதாவது, "இந்த சீஸனில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லையென்ற வருத்தமிருந்தது. தற்போது தொடர்ச்சியான பயிற்சியால் அதை எட்ட முடிந்துள்ளது.

இந்த போட்டியில் 10வது ஓவரில் இருந்து ஒரு ஓவருக்கு எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என திட்டமிட்டு விளையாடினோம். என்னுடைய இன்னிங்ஸை போல முகிலேஷின் இன்னிங்ஸ், மிக முக்கியமான பங்களிப்பாகும் நாம் அதை மறந்துவிடக் கூடாது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இது என்னுடைய முதல் சதமாகும். கடந்த தொடர்களில் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது அது தற்போது இல்லை. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதில் விளையாட ஆர்வமாக உள்ளோம்" என தெரிவித்தார்.

ஷாருக்கான்:வெற்றிக்குப்பின் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாருக்கான் பேசுகையில், "கண்டிப்பாக இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்ட முடியுமா என்ற சந்தேகமிருந்தது. ஆனால் சாய் சுதர்சனின் பிரமாதமான பேட்டிங் எதையும் சாத்தியமாக்கியது.

எங்கள் அணியில் நிலவும் பாஸிடிவான மனநிலை ஆட்டத்திலும் ஆட்டத்திற்கு வெளியேயும் எங்களுக்கு கைகொடுக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் தங்களால் முடிந்த பங்களிப்பை ஒவ்வொரு வீரர்களும் அளித்து வருகின்றனர். இறுதிப்போட்டியையும் மற்றுமொரு போட்டியாகவே நாங்கள் பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

சாய் கிஷோர்:தோல்விக்குப்பின் திருப்பூர் தமிழன்ஸின் கேப்டன் சாய் கிஷோர் பேசுகையில், "இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோர் மிகவும் அதிகம் தான். ஆனால் நாங்கள் ஃபீல்டிங் மற்றும் பௌலிங்கில் செய்த தவறு மற்றும் சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷின் சிறப்பான பேட்டிங்கால் தோற்றோம். கண்டிப்பாக அடுத்த போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை சரி செய்திடுவோம் என்ற நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! காலிறுதிக்கு தகுதி?

ABOUT THE AUTHOR

...view details