மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை எடுத்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் தமது அபாரமான பந்துவீச்சால் எதிரணியை திணறடித்து வருகிறார்.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இதுவரை நான்கு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் பும்ரா. இவற்றில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
We only believe in Jassi bhai 😎
— BCCI (@BCCI) December 29, 2024
200 Test Wickets for Boom Boom Bumrah 🔥🔥
He brings up this milestone with the big wicket of Travis Head.#TeamIndia #AUSvIND @Jaspritbumrah93 pic.twitter.com/QiiyaCi7BX
44 டெஸ்ட் மேட்ச்களில், மொத்தம் 8484 பந்துகளை வீசி, பும்ரா 200 வது விக்கெட் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். இவருக்கு முன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை எடுத்திருந்தார். அவரது சாதனையை முறியடித்திருப்பதன் மூலம், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், தென்னாப்பிரிக்க வீரர்கள் டைல் ஸ்டெயின், ரபாடா ஆகியோரின் வரிசையில் நான்காவது இணைந்துள்ளார் பும்ரா.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 44 டெஸ்ட் போட்டிகளிலும், அண்மையில் ஓய்வை அறிவித்த ரவிசந்திரன் அஸ்வின் 37 போட்டிகளிலும் 200 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது