திருநெல்வேலி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, நாளை டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.
கண்ணாடி பாலம் திறப்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விவாவில், ரூ.37 கோடி செலவில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும், விழாவில், சிறப்பு பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் சரவணன், சுமார் 2 ஆயிரம் அரிசியில், திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலை உணர்த்தும் வகையில் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் சரவணன். இவர் தமிழ் மீதும், தமிழ் இலக்கணம் மீதும் அதிக பற்று கொண்டுள்ளார். இவர் கிடைக்கும் நேரங்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். அந்த வகையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, வித்தியாசமான முறையில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை வரைய வேண்டும் என ஓவிய ஆசிரியர் சரவணன் முடிவெடுத்துள்ளார்.
அரிசியில் திருவள்ளுவர் சிலை:
அதன்படி, நாட்டின் பாரம்பரிய தானியமான சுமார் 2000 அரிசிகளை கொண்டு, திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலை உணர்த்தும் வகையில் 3 அங்குலம் அளவிற்கு கன்னியாகுமரி உள்ள திருவள்ளுவர் சிலையை தத்துரூபமாக வடிவமைத்துள்ளார்.
இதையும் படிங்க: "அடுத்த தலைமுறை இருக்குமா?" டங்ஸ்டன் திட்டத்தில் மதுரை மேலூர் மக்கள் வேதனை!
இது குறித்து ஆசிரியர் சரவணன் ஈடிவி பாரத் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூருகையில், “ திருவள்ளுவர் வெள்ளி விழாவிற்கு தமிழன் என்ற பெருமையுடனும் எனது கலை ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் விதமாகவும், அரிசியை கொண்டு 3அங்குலம் அளவில் திருவள்ளுவர் உருவத்தை அமைத்துள்ளேன்.
இந்த சிலையை வடிவமைக்க மொத்தம் இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேன். கன்னியாகுமரியில் இருப்பதைப் போன்ற கட்டமைப்பை இதில் உருவாக்கியுள்ளேன். வள்ளுவன் வாசுகியிடம் அரிசி எடுத்துவர சொல்லி அதை கழுவி உட்கொண்டதாக வரலாறு தெரிந்து கொண்டேன். அதன் காரணமாகவும், அரிசி நமது தமிழ்நாட்டின் சிறந்த தானியங்களில் ஒன்றாக இருப்பதாலும் அரிசியால் திருவள்ளுவர் உருவத்தை வரைய முடிவெடுத்தேன்.
ஓவியம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். எனவே, என்னை போன்ற ஓவிய ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் நிரந்தரமான பணி வழங்கி, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார். ஓவியர் சரவணன், தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்த நிலையில், சரியான ஊதியம் கிடைக்காததால் தற்போது வீட்டில் இருந்தபடி ஓவியம் வரைந்து வருவது குறிப்பிடத்தக்கது.