டெல்லி: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளை ஒட்டி, டெல்லியில் உள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அக் கட்சி எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால், ஒன்றிய அரசாங்கம் நம்முடைய மீனவர்களுக்கும், இலங்கையில் இருக்கக் கூடிய மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும். இதற்கு இலங்கை அரசாங்கத்திடம் பேசி நிரந்தர தீர்வு காண்பதற்காகக் குழுக்களை அமைப்பதாகப் பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர அந்த கூட்டங்கள் நடைபெற்றதாக எந்த செய்தியும் கிடையாது.
அந்த குழு கூட்டங்கள் நடத்தி, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் மறுபடியும் வலியுறுத்துகிறோம். விரைவிலேயே ஒன்றிய அரசாங்கம் அங்கே கைது செய்யப்பட்டு இருக்கக் கூடிய நம்முடைய மீனவர்களை மற்றும் அவர்களுடைய படகுகளோடு மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு தொடர்ந்து பல்வேறு விதங்களில் வஞ்சிக்கப்படுகிறது, ஆளுநர் பிரச்சனைகள் உட்பட அனைத்து பிரச்சனைகள் குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.
இவ்வாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.