ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தல் 2026 வரவிருக்கும் வேளையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடே உற்று நோக்கும் இந்த இடைத்தேர்தலின் பரப்புரை இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 3) மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி, சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள்
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளன. இதில் 53 வாக்குப்பதிவு மையத்தில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 (1,09,636) ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 (1,16,760) பெண் வாக்காளர்களும், 37 பிற பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 (2,26,433) வாக்காளர்கள் வரும் 5-ஆம் தேதி வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
பிரச்சாரம் நிறைவு
இந்த இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் கருங்கல் பாளையம் காந்தி சிலை முன்பு மாலை 6 மணிக்கு தனது பரப்புரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல்: பண மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்; திமுக மீது பகீர் குற்றச்சாட்டு! |
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு நகரின் பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஆர்.கே.வி., சாலையில் உள்ள கிருஷ்ணா திரையரங்கம் முன்பாக 6 மணிக்கு பரப்புரையை நிறைவு செய்து வைத்தார்.
இந்த இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்த நிலையில், அதற்காக வெளியூரில் இருந்து வந்தவர்கள், உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.