வேலூர்: பொங்கல் பண்டிகையில் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா ஆகியவை நடைபெறுவது வழக்கமாகும். பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு துவங்கிய எருது விடும் திருவிழா, பல்வேறு கிராமங்களில் வரும் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தின் 18 கிராமங்களில் எருது விடும் மற்றும் மஞ்சுவிரட்டு விழா போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்தும், எருது விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 03) திங்கட்கிழமை குடியாத்தம் அடுத்த காவனூர் கிராமத்தில் 4 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
முன்னதாக காவனூர் கிராமத்தில் மாடுவிடும் சாலைகளில், மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு விதிகள் படி, போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படடுள்ளது.
இதையும் படிங்க: கம்மவான்பேட்டை எருது விடும் விழா.. சீறிப்பாய்ந்த காளைகள்!
இதில், வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து, போட்டியில் பங்கேற்ற காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. இந்த விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3வது பரிசாக ரூ.50ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 135க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எருது விடும் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.