சென்னை: இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், நேற்று (டிச.25) நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர் குகேஷ், சீன நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் லிங்கை வீழ்த்து சாம்பியம் பட்டம் பெற்றார். அதன்மூலம், 18 வயதில் உலக சாம்பியம் பட்டம் பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.
அதையடுத்து, குகேஷுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டு ஆளுநர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் டிச.17 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் குகேஷை பாராட்டினர். மேலும், தமிழக அரசு அறிவித்த ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையையும் குகேஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று (டிச.25) நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார். அப்போது, குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் துணை கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.
ரசிகருக்கு பரிசளித்த சிவகார்த்திகேயன்:
சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ், அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் (கைக்கடிகாரம்) பெற்றுள்ளார். மேலும், குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், "இது மில்லியன்கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்?
அதனைத் தொடர்ந்து, குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்துள்ளார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.