தஞ்சாவூர்: கடந்த மூன்று மாதங்களில் சீர்மரபினர் நல வாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வாரியம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 08) நடைபெற்றுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துக்கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “2024-ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 2017 சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். கடந்த மூன்று மாத காலத்திற்குள், 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்திருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசு எடுக்கும் புள்ளி விபரங்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறு எடுக்கப்படும் கணக்கெடுப்புகளையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்கின்றன. இப்படி இருக்கும் சூழலில் மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு: 'நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்' - திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் |
தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சரின் 4 ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் தந்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகத் தான் இந்த வெற்றியைப் பார்க்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி.,
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) February 8, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் pic.twitter.com/MYYSf5a3Zy
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களை பின்பற்றக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுதமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சான்றுகளை தந்துள்ளனர். முதலமைச்சரின் சிறந்த ஆட்சிக்கு, சமூக நீதி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி,” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் எம்பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், அசோக்குமார் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.