சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியானது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ( நிர்வாகம்) சுகுமார் மற்றும் கூடுதல் ஆணையர் ( கல்வி ) ஹரிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 2023,2024 ஆகிய ஆண்டுகளில் நாட்காட்டி வெயிடப்பட்டுள்ளது. அதே போல வரும் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,200 பெரிய நாட்காட்டியும், 25,000 சிறிய நாட்காட்டியும் தயார் செய்யப்பட்டு திருக்கோயிலில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
கடந்த ஆண்டுகளில் சிறிய நாட்காட்டிகள் மூலம் 6 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்தது. பெரிய நாட்காட்டியை தயாரித்து அரசு அலுவலங்கள் கொடுக்கப்பட்டது. அதன் தயாரிப்பு செலவிலனம் போக மீதம் 3 லட்சம் திருக்கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
ஆயிரம் கிலோ தங்கம்
இந்த ஆண்டு இறுதியில் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்படும். முன்பு வரை 639 கிலோ தங்கங்கள் தான் வைப்பு நிதியில் வைக்கப்பட்டது. ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்து கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. 20 ஆயிரம் திருக்கோயிலுக்கு அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பல கோயில்களில் அர்ச்சர்கள் தொகையை பெற்றுக்கொண்டு கோயில் உள்ளே அழைத்து செல்கின்றனர் என்பதில் எங்களுக்கும் அந்த ஏக்கம் உள்ளது. முடிந்த அளவு அவர்களை கட்டுப்படுத்தி வருகிறோம். ஏதாவது வகையில் நீதிமன்றம் சென்று அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று விடுகிறார்கள். முழு முயற்சியோடு இதுபோன்ற செயல்களை நடக்காமல் இருப்பதற்கு மிக விழிப்புணர்வோடு பெரிய திருக்கோவில்களுக்கு நல்ல ஆளுமை உடைய அதிகாரிகள் நியமித்து முழு நேரம் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை நியமித்து கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இந்த குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதில் துறை முழு வேகத்தோடு செயல்படும்.
பழனியில் முருகன் கோயில் ரோப் கார் சேவை:
இரவு 8 மணி வரை தான் ரோப்கார் இயக்கப்படுகிறது. தைப்பூசத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். பாதுகாப்பு அம்சம் முக்கியம். இரவு நேரங்களில் ரோப் கார் சேவை அதிக நேரத்திற்கு செயல்படுத்தவும் தயார். ஆனால், இயந்திரங்களின் கொள்ளளவு இயந்திரங்களின் தன்மை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகு அது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். புதுவருட பிறப்பில் கோயில் நேரங்களில் திருக்கோயில் இயங்கும். எந்த மாற்றமும் இல்லை.
திருப்போரூர் முருகன் கோவிலில் உண்டியலில் விழுந்த செல்போன்:
இரண்டு நாட்களில் அதை முடித்து விடுவோம். தொன்று தொட்டு பழக்க வழக்கங்களை திடீரென்று உடைத்து விடக்கூடாது என முழு கவனத்தோடு இருக்கிறோம். ஜனவரி 2 மற்றும் 3க்குள் நல்ல சுமூகமான சூழல் ஏற்படும். அனைவரும் மகிழ்ச்சி அடைய கூடிய முடிவு இருக்கும்'' என்றார்.
அரசியலாக்க வேண்டாம்
தேமுதிகவை பார்த்து திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியது குறித்தான கேள்விக்கு, ''திமுக பயப்படக்கூடிய கட்சியா? விஜயகாந்த் நல்ல கலைஞன். கலைஞர் மீது மாறா பற்று கொண்டவர். அரசு முழு மரியாதை தந்தது. ஒரு சில சூழ்நிலைகளில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட இடங்கள் என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் எதற்கும் குந்தகம் வந்து விடக்கூடாது எனவும் அவர்களும் மகிழ்ச்சியான முறையில் பேரணியை நடத்தி இருக்கிறார்கள்.
முதலமைச்சர் உத்தரவுக்கு ஏற்ப குரு பூஜையில் குடும்பத்தோடு சேர்ந்து கலந்து கொண்டோம். மன்னிப்போம், மறப்போம் அரசியலில் கூட்டணிகளில் லாபம் நஷ்ட கணக்குகளை பார்ப்பது அல்ல. நேற்றைய நிகழ்வு முழுமனதோடு விஜயகாந்த் மறைவின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். கடந்து செல்வோம், இதனை அரசியல் ஆக்க வேண்டாம்'' என தெரிவித்தார்.