ஜெய்ப்பூர்: 2024 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று தொடரின் 9வது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் களம் இறங்கிய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5, ஜோஸ் பட்லர் 11, சஞ்சு சாம்சன் 15 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களம் புகுந்த ரியான் பராக் மற்றும் அஷ்வின் கூட்டணி சிறுது நேரம் அணிக்கு ரன்களை சேர்த்தது. 3 சிக்சர்கள் என அதிரடி காட்டிய அஷ்வின், அக்சர் படேல் பந்தில் கேட்ச் கொடுத்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்கள் பறிபோனாலும், மறுபுறம் இளம் வீரர் ரியான் பராக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.