திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராகவ் கபில். இவர் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் செஸ் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதற்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் ராகவ் கபில் கலந்து கொண்ட நிலையில் ராகவ் கபில் உட்பட ஐந்து பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த ஐந்து பேர் அடங்கிய குழு இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பில் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவான செஸ் போட்டியில் தமிழக செஸ் அணியாக பங்கேற்றது.
தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன்: தொடர்ந்து, இந்த போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எனவே, ஐந்து பேருக்கும் தனித் தனியாக தங்கப்பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. அந்த வகையில் ராகவ் கபில் தேசிய அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை பரிசாக பெற்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற பரிசு கோப்பையுடன் ராகவ் கபில் இன்று (ஜனவரி 2) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து ராகவ் கபில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “தேசிய அளவில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன்.
இதையும் படிங்க: பிரக்ஞானந்தா முதல் காசிமா, குகேஷ் வரை.. 2024 இல் சர்வதேச அளவில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகள்!
அடுத்த கட்டமாக கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக சாம்பியன் பட்டம் போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்காக தயாராகி வருகிறேன். அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த டி.குகேஷ், பிரக்யானந்தா ஆகியோர் என்னை போன்று செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கமாகவும் உள்ளார்கள்” என்றார்.