திருநெல்வேலி: நெல்லையில் 2016 ஆம் ஆண்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் ஆசிட் வீசியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஆசிட் வீசியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆறு மாதம் சிகிச்சையில் இருந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திருமணமான பெண் தனது கணவருடன் பேபி லட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அப்போது அந்த பெண் அருகிலிருந்த செல்போன் கடையில் வேலையும் பார்த்து வந்துள்ளார். வீட்டு ஓனர் பேபி லட்சுமியின் சகோதரர் ஞானதுரை. இவர் சீவலப்பேரியை சேர்ந்தவர். இந்த நிலையில், ஞானதுரை தனது சகோதரி வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி பள்ளி மாணவி மரணம்.. நுரையீரலில் கழிவு நீர்..? ஆசிரியைக்கு சிறை..!
மேலும், செல்போன் மூலமாகவும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் தனது வீட்டின் உரிமையாளர் பேபி லட்சுமி மற்றும் அவரது சகோதரியிடமும் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஞானதுரை கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த பெண்ணை கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்தியதோடு, ஆசிட்டை முகத்தில் வீசியுள்ளார்.
மேலும், நயலான் கயிற்றால் பெண்ணின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 6 மாதங்களுக்கு பின் அந்தப்பெண் 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று சீவலப்பேரியைச் சார்ந்த ஞானதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி (பொறுப்பு) பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரபா இந்த வழக்கை நடத்தினார். பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.