சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 8.45 மணி முதல் சட்டப்பேரவை வளாகத்திற்கு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வரத் தொடங்கிய நிலையில், 9.10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
மூன்று நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சர்ச்சையில் முடிந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 9.30 மணிக்கு சரியாக வருகை தந்த நிலையில், அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று ஆளுநருக்கு காவல்துறையின் சார்பில் "God of Honor" எனும் அரசு மரியாதை வழங்கப்பட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்ததும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஆளுநர் இருக்கை அருகே வந்து கூச்சல் எழுப்பிய அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன ஆளுநர், தேசிய கீதம் இசைக்க வேண்டும், தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் உறுப்பினர்கள் கூச்சலிடும் வரை காத்திருந்த ஆளுநர் பின்னர் தேசிய கீதம் அவமதிக்கப்படுவதாக கூறி தனது உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார்.
சட்டப்பேரவையிலும் எதிரொலித்த 'யார் அந்த சார்'?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ச்சியாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் சட்டைகளில் யார் அந்த சார் எனும் பேட்ஜை சட்டையில் குத்தியும், கையில் பதாகைகளை ஏந்தியும் குரல் எழுப்பினர்.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம், சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவைகளை எழுப்பி பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ், பாமக மற்றும் பாஜக வெளிநடப்பு
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததே காரணம் என்று கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதனை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறி பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அவை முன்னவர் துரைமுருகன் சிறப்பு தீர்மானம்
துரைமுருகன் வாசிப்பில், அரசியலமைப்புச் சட்டம் 176வது பிரிவின் கீழ் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார், ஆளுநர் உரையை தவிர்த்து மற்ற மாநிலம் போல நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும். ஆனாலும் ஆளுநர் மீண்டும் தனது உரையை படிக்காமல் இருக்கிறார். கடந்த ஆண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஆளுநருக்கு பதில் அனுப்பப்பட்டிருந்தது. பேரவையின் மறைவை காக்க அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பதிவுகளை அவை குறிப்பில் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆளுநரின் முழு உரையையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசினுடைய சாதனைகள் மக்களுக்கு சென்றடைய கூடாது என்பதற்காக ஆளுநர் இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார். தேசிய கீதத்திற்கு எந்த வகையிலும் தமிழ்நாடு அவை பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், தேசிய கீதத்தை அவமதித்தது ஆளுநர் ரவி தான் என்றும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளுநர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படை கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த் தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
தேசிய கீதத்தை பாடுவதற்காக முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதனை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதனால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சபாநாயகர் விளக்கம்
சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் மரபு. ஆளுநருக்காக சட்டப்பேரவை மரபுகளை மாற்ற முடியாது. ஆளுநர் உரையை வாசிக்க விருப்பம் இல்லாததால் தான் அவர் இப்படி செய்துள்ளார். அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவது தொடர்ந்து வருகிறது என்றும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் என கூறினார். மேலும் அடுத்த முறையும் இதே ஆளுநர் இருந்தாலும் அழைப்பேன் அப்போதும் இதே முறையைத்தான் நாங்கள் தொடர்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதலமைச்சர் விமர்சனம்
அரசியல் சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவது தனது வழக்கமாக வைத்துள்ளார் தமிழக ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஓட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும். தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனம் இல்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அனைவர் மனதில் எழும் கேள்வி என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.