சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளியேறிய நிலையில், அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்தார்.
அந்தவகையில், ஆளுநர் உரையில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் என்ன என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு இலக்காக கொண்டுள்ளது.
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
- மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை 571 கோடிக்கும் அதிகமான பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
- காலை உணவுத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 17.53 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு அரசின் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
- 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 2,085 கல்வி நிறுவனங்களில் பயிலும் 14.68 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
- முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த இரு ஆண்டுகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 9,563 கி.மீ சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டத்தை மாநில அரசு விரைவில் தொடங்க உள்ளது.
- 2021-ஆம் ஆண்டு முதல் நுகர்வோரின் நலனை பாதிக்காத வகையில் தமிழ்நாட்டில் பால் கொள்முதலின் விலை ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திடவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
- 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
- சட்டம் ஒழுங்கை பொருத்தவரை சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.
- போதைப் பொருள்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
- 2021-ஆம் ஆண்டு முதல் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
- நாட்டின் வாகன உற்பத்தியின் தலைநகராக தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
- தமிழக அரசு தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) இயகத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்தும்
- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6,309 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகள், மருத்துவமனை கட்டடங்கள், நீர்நிலைகள், விளையாட்டுத் திடல்கள் போன்ற 252 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்புகளை செயல்படுத்திடவும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
- மாநில அரசு அனுப்பியுள்ள மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- தமிழகத்தில் 6,104 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலமாக 31.41 லட்சம் கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன.
- பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்திட தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநில அரசு கோரிய 6,675 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
இதை வாசித்த பின், தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னவர் துரைமுருகன், ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை மட்டும் அவைக் குறிப்பில் சேர்க்க வேண்டும் எனும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.