சென்னை: மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் அளவுக்கு, மருத்துவர்களுடைய சேவை அமைய வேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வுச் செய்யப்பட்ட 2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
மருத்துவ தலைநகர்: இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட மாடல் அரசு என்பது, மக்களைக் காக்கக்கூடிய அரசு. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் உயர்ந்த லட்சியம். எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி, அதையெல்லாம் எதிர் கொண்டு திராவிட மாடல் அரசு பணியை மேற்கொண்டு வருகின்றது.
உயிர் காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கின்றனர். தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருப்பதற்கு திமுக ஆட்சிக் காலங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புகள் தான் காரணம். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை வரை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கிய கட்டமைப்புகள் தான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
கருணாநிதி கொண்டு வந்த திட்டம்: அரசு மருத்துவமனைக்கு வரக் கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிகளை, குழந்தைகளின் உடல் நலனை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்து கொள்ளக் கூடிய மருத்துவர்கள் தேவை. கிராமங்கள், சிறிய நகரங்களிலிருந்தும் மருத்துவர்கள் உருவானால் தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய முறையில் சிகிச்சை கிடைக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்கிற திட்டத்தை மு்ன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். இதனால் தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் உருவாகி உள்ளனர்.
இதையும் படிங்க: 600 பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கு எதிர்ப்பு! வாலிபர் சங்கத்தினர் போராட்டம்!
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து இருக்கிறது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு அவசியமான தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத் தான் இவை தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். எனவே, மருத்துவர்கள் பங்களிப்பு மிக மிக முக்கியமாக இருக்கிறது. மருத்துவர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை.
மக்களின் உயிர் காக்கும் சேவை: இன்று பணி ஆணை பெற்ற மருத்துவர்கள் மக்களின் உயிர் காக்கும் சேவையில் ஈடுபட உள்ளனர். இந்த இடத்தை அடைய நீங்கள் எத்தனையோ இரவுகள் கண் விழித்திருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து இருப்பீர்கள். எல்லாவற்றையும் கடந்து தான் இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். மக்கள் உங்களை நம்பி உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கின்றனர்.
மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் அளவுக்கு, உங்களுடைய சேவை அமைய வேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள், உங்கள் நலனை கவனிக்க, இந்த அரசு இருக்கிறது. உயிர்களைக் காக்கும் தொண்டாற்றப் போகும் உங்களுக்குத் தேவையான, எது எது அவசியம் தேவைப்படுகிறதோ? அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் என உறுதியளிக்கின்றேன்,"என்றார்.